Newsline Srilanka

Give a Voice to Voiceless Peoples

காசா போர் நிறுத்தம், கருக்கலைப்பு சுதந்திரம் – கமலா ஹாரிஸ்

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை [நவம்பர் 5] நடைபெற உள்ளது.களத்தில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனல்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.பாலஸ்தீன – இஸ்ரேல் போர், உக்ரைன் – ரஷ்ய போர் ஆகியவற்றுக்கு மத்தியில் சர்வதேச அரசியல் களம் பரபரப்பில் உள்ள நிலையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் அதன் தாக்கம் கண்கூடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பாலஸ்தீன போர் குறித்து கமலா ஹார்ஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் தாக்குதலில் நடத்தி 251 பேரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போரை நிறுத்த விரும்பாத இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலை ஏற்காமல் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் நேற்றைய தினம் மிச்சிகன் மாகாணத்தில் நடந்த தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பேசிய கமலா ஹாரிஸ், இந்த வருடம் மிகவும் கடுமையானது.

காசாவில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை கவலையளிக்கிறது. காசா மற்றும் மற்றும் லெபனானில் அதிகபடியான இடப்பெயர்வு நடந்துள்ளது. ஒரு ஜனாதிபதியாக நான் எனது அதிகாரத்தை பயன்படுத்தி காசா போரை முடிவுக்கு கொண்டுவர போராடுவேன்.பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். இஸ்ரேலின் பாதுகாப்பையும், பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்தையும் உறுதி செய்வேன். இஸ்ரேல் – லெபனான் பிரச்சனையிலும் சுமூக தீர்வை ஏற்படுத்த பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அமெரிக்காவில் சாமானிய மக்களுக்கான மருத்துவ செலவீனங்களை குறைத்து அனைவராலும் எளிதில் பெறக்கூடிய குறைந்த செலவின ஹெல்த்கேர் சேவைகள் வழங்கப்படும்.

மருத்துவம் அனைவரின் அடிப்படை உரிமையில் சேரும். மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சேவைகளின் செலவினமும் குறிக்கப்படும்.உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள், சிறு-குறு தொழில்கள் பாதிக்காத வண்ணம் வரிவிதிப்பு குறைக்கப்படும், குழந்தைப்பேறு, கருக்கலைப்பு சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.இதற்கிடையே பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்குப்பதிவில் மோசடி நடக்கும் சூழல் உள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வாக்காளர் அட்டை கட்டாயமாக்கப்பட்டாலொழிய இந்த மோசடிகளைத் தடுக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்