2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிகளும் ரூ.120 கோடி செலவிடலாம். இதற்கான ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரத்தை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ஜடேஜா ( 18 கோடி), பதிரனா ( 13 கோடி), ஷிவம் துபே (12 கோடி), டோனி (4 கோடி) ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. அந்த அணி ரூ.65 கோடி செலவழித்துள்ளது.
அந்த அணியிடம் மிகுதி 55 கோடி இருக்கிறது.கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய அணி தலைவர் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், சி.எஸ்,கே. முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.அவர் தெரிவிக்கும் போது, நான் டெல்லியில் டோனியை சந்தித்தேன்.
அங்கே ரிஷப் பண்டும் இருந்தார். ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் ஒருவர் மஞ்சள் ஆடையை அணியவுள்ளார் என்றார்.விக்கெட் கீப்பர், துடுப்பாட்ட வீரராக இருக்கும் ரிஷப் பண்ட், டோனிக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் சி.எஸ்,கே.அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால் அணி தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 3,284 ஓட்டங்களை எடுத்துள்ளார். ஒரு சதமும், 17 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 128 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரது தலைமையில், டெல்லி அணி 2021 பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.கார் விபத்துக்கு பிறகு ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு விளையாடிய அவர் 13 ஆட்டத்தில் 446 ஓட்டங்களை எடுத்தார். 155 சராசரியாகும். 3 அரைசதம் அடங்கும்